உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று பெயர் மாற்றம் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் பெயர் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று மாற்றப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. அவர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துப் பேசினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

1,575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக, ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும்.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே உள்ள திறமைகளை, பிறருடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும், மாணவர்களின் நலனுக்காக பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.12.84 கோடி செலவில் தோற்றுவிக்கப்படும்.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் வளர்ச்சியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும். சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒலி வடிவில் பாடநூல்கள் தயாரித்து வழங்கப்படும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் கல்வி அறிவையும், அவர்களது உடல் மற்றும் மனவலிமையையும் மேம்படுத்தும் வகையில், சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் உடல் இயக்க வல்லுநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பயிற்சியை மேம்படுத்த, நவீன கற்றல் மற்றும் உடல் இயக்க உபகரணங்கள் வழங்கப்படும். டி.பி.ஐ. வளாகத்தில் நூலகம் அமைக்கப்படும்.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்திய மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவர்களிடையே வாசிக் கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆசிரியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் அமைக்கப்படும்.

மத்திய மற்றும் மாநில அரசின் விருது பெற்ற தமிழ் நூல்களை நூலகங்களுக்கு வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தையல், இசை மற்றும் ஓவியம் ஆகிய பாடங்களை பயிற்றுவிக்க தேவையான உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில், மாணவர்களின் பெயருடன் பெற்றோர்களின் பெயர்களை அச்சிட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளையும், தனித்துவமான கலைத்திறன்களையும் வளர்க்கும் வண்ணம் கலை, இலக்கியப் போட்டிகளும் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்க பாரம்பரிய உணவுத்திருவிழாவும் நடத்தப்படும்.

மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவுத் திறன் தேர்விற்கான மாதிரி வினாவிடை கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஏற்ப மேல்நிலைப்பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு முதன்மைப்பாடங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் விதமாக, பாடத்தொகுப்புகள் மேம் படுத்தப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்படும் கணினி வழி தேர்வுகளை வலுப்படுத்திட ஐ.ஐ.டி., எம்.ஐ.டி. போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு உடல் கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மற்றும் சாகச விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

தேசிய மாணவர்படை மாணவர்களின் பயிற்சிக்காக துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் மேலக்கோட்டையூரில் அமைக்கப்படும். தென் மாவட்ட தேசிய மாணவர்படை மாணவர்கள் விமானப்படை பயிற்சி பெற ஏதுவாக மதுரை மாவட்டத்தில் தேசிய மாணவர் படையின் விமானப் படை அணி நிறுவப்படும்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு மையம் அமைக்கப்படும். கல்லூரி செல்லும் விளையாட்டு மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு விடுதி வசதிகள் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.