உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பண மழையைக் கொட்டும் பறக்கும் "தேவதைகள்'! தேனீக்கள்

இந்த வார்த்தையை நினைக்கும்போதே பலருக்கும் நாவில் நீர் சுரக்கும். அத் தேனை பல கி.மீட்டர் தூரம் தேடிச் சென்று சேகரித்துவரும் தேனீக்களைத் தேவதைகளாகப் போற்றி, அதன் மூலம் வாழ்வை வளமாக்கியுள்ளார் மதுரையைச் சேர்ந்த எஸ்.ஜோசப்பின் செல்வராஜ். தான் முன்னேறியது மட்டுமின்றி 500 தேனீ வளர்ப்பு விவசாயிகளை உருவாக்கியதுடன் ஆயிரக்

கணக்கான இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து சிறந்த தொழில் முனைவோராக திகழ்ந்து வருகிறார். மதுரை புதூரில் உள்ள தனது "பிரபா ஹனி ஹவுஸில்' பரபரப்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஜோசப்பினை சந்தித்தோம்.

""எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி கிராமமாகும். மதுரையில் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், 2005-ம் ஆண்டின் இறுதியில் மதுரை வேளாண் கல்லூரியில் உள்ள கிருஷி விக்யான் கேந்திராவில் மூன்று நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி பெற்று, ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தேனீ வளர்க்க முடிவு செய்தேன்.

ஒரு பெட்டி சுமார் ரூ.1200 விலையில் 10 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட தேனீ வளர்ப்பின் மூலம், முதல் மாதத்தில் நான் ஈட்டிய வருமானம் ரூ.600 மட்டுமே. ஆனால், இந்தத் தொழில் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது யாருக்கும் பிடிக்கும். எனது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தொடர்ந்து தேன் அதிகம் கிடைத்ததால் தேனீ வளர்ப்பு தொழிலை விரிவுபடுத்திட திட்டமிட்டேன். இதற்காக தேசிய தோட்டக்கலை இயக்ககத்தை அணுகியபோது 50 சதம் மானியத்துடன் கடன் வழங்கினர். இதன் மூலம், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம்.

ராணி தேனீயை உற்பத்தி செய்வதையும் தெரிந்துகொண்டதால் பெட்டிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. தேவையைக் கருத்தில்கொண்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி செல்லும் வழியில் உள்ள கள்ளிவேலிப்பட்டி கிராமத்தில் "விபிஸ் இயற்கை தேனீ பண்ணை'யைத் தொடங்கினேன். சுமார் இரண்டரை ஏக்கரில் தொடங்கப்பட்ட இப் பண்ணையில் தற்போது 1,500 பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து வருகிறேன்.

இதுதவிர, தேனீ வளர்ப்புப் பயிற்சியையும் ஒவ்வொரு மாதமும் 2-வது ஞாயிற்றுக்கிழமை இலவசமாக அளித்து வருகிறேன். உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவை மட்டும் பயிற்சியில் பங்கேற்பவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களது பண்ணையிலும், தேன் விற்பனை நிலையத்திலும் தற்போது 20 பேர் வரை வேலை செய்கின்றனர். தோட்டக்கலை துறையினரும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமும் எங்களின் முயற்சிக்கு தகுந்த ஊக்கமும் உதவியும் அளித்தன.

ரூ.600 வருவாயை ஈட்டத் தொடங்கிய நான் இன்றைக்கு மாதம் ஏறக்குறைய ரூ.80 ஆயிரம் வரை வருமானம் ஈட்டும் அளவுக்கு எனது நிலை உயர்ந்துள்ளது. பெண்கள், மாணவர்களும் சுலபமாக மாதம் ரூ.2 ஆயிரம் வருவாய் ஈட்டலாம். இத்தொழிலுக்கு நிலம்தான் தேவை என்றில்லை. வீட்டின் மாடியில்கூட செய்யலாம். தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட படித்தவர்கள் மட்டும் அல்ல, படிக்காத பாமர மக்களும் வரலாம். கிராமப்புற மகளிர் குடும்ப பொருளாதார மேம்பாட்டுக்காக தங்களின் பங்களிப்பாக தேனீ வளர்ப்பைச்செய்யலாம்.


தேனீ கொட்டும் தன்மை கொண்டதால், பலருக்கு தேனீக்கள் மீது பயமாகக் கூட இருக்கலாம். ஆனால், தேனீயை மென்மையாகக் கையாண்டால் அது நண்பன் போல் நம் வசமாகிவிடும். தேனீ கொட்டுவதற்காகவே பலரும் வந்து எங்களிடம் வந்து செல்கின்றனர். இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. தேனீக்கள் கொட்டினால் ஒரு நாள் வீக்கம் வலி ஏற்படும். அதனால், மூட்டுவலி, தசைப்பிடிப்பு மற்றும் முடக்கு வாதத்திற்கு சிறந்த மருந்தாக உள்ளது. சிக்கன்குனியா நோய் பாதிப்பைக் குறைப்பதாகவும் சொல்லுகின்றனர்.

தேனீ கொட்டினால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகும். இதனால், அக்குபஞ்சர் சிகிச்சை போன்று தேனீக்கள் மூலம் "பீவனம் தெரபி' அளிக்கப்பட்டு வருகிறது. தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் மட்டும்தான் விலை குறைவு. மற்றபடி தேன் மெழுகு, தேன் பிசின், ராயல் ஜெல்லி, தேனீ மூலம் கொண்டு வரப்படும் மகரந்தம், தேனீ விஷம் எனப் பல்வேறு பொருள்களும் விலை அதிகமானவை. ஆனால், இதுபற்றி பலருக்கும் தெரிவதில்லை.

எங்கள் பிரபா தேன் ஹவுஸ் மூலம் இயற்கை தேன், பலபூக்கள் தேன், நாவல் தேன், சூரியகாந்தி தேன், முருங்கைத் தேன், குங்குமப்பூ தேன், இஞ்சித்தேன், வெள்ளைப்பூண்டு தேன், ஆப்பிள் தேன், பேரீச்சை தேன், ரோஜா தேன், மாம்பழத் தேன் என 25 தேன் ரகங்களை விற்று வருகிறோம்.

நாவல் தேனை நீரிழிவு நோயாளிகள் அதிகம் வாங்கி உண்கின்றனர். இவற்றின் விலையும் மற்ற தேனை விட சற்று கூடுதலாகும். நாவல் பழ மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளைக் கொண்டு இந்த வகை தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.

அண்மையில் தில்லியில் உள்ள தேசிய தேனீ வாரிய அதிகாரிகளுடன் விடியோ கான்பரன்ஸிங் மூலம் உரையாடியபோது, 1981-ல் தேன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் இருந்ததாகவும், தற்போது அந்த உற்பத்தி வரைபடத்திலேயே தமிழகம் இல்லை என்ற தகவல் எனக்குத் தெரியவந்தது. என் லட்சியமெல்லாம் இளைஞர்களுக்கு இப்பயிற்சியை அளிப்பதன் மூலம் தேன் உற்பத்தியில் தமிழகத்தை முன்னிலை பெறச் செய்வதுதான்'' என்கிறார் ஜோசப்பின் தேனீயின் சுறுசுறுப்புடன்.

1 comment:

  1. தமிழகத்தை முன்னிலை பெறச் செய்ய தேனீ ஜோசப்பின் முயற்சி வாழ்க

    Rajakumar
    villupuram

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.