
டிஎன்பிஎஸ்சி குருப்-3-ஏ தேர்வுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மே 10, 11-ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் செயலாளர் (பொறுப்பு) இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குருப்-3-ஏ தேர்வில் அடங்கிய பண்டகப் பொறுப்பாளர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு கடந்த 2013-ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், பண்டகப் பொறுப்பாளர் பதவிக்கு 20 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஏப்ரல் 25-ம் தேதி வெளியிடப்பட்டது. அவர்களுக்கு மே 10, 11-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மற்றும் விரைவு அஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண் மற்றும் கணினிவழி விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ‘ஒரு காலியிடத்துக்கு 20 பேர்’ என்ற விகிதத்தில் அழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக உரிமம் கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் ஒருங்கிணைந்த தரவரிசைப் பட்டியலில் தங்களின் வாய்ப்பை இழக்க நேரிடும். மேலும், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||