ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியை தொடர முடியாது என்றும், இந்த வகை ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாயக்கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த தகுதி தேர்வை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்துள்ள வழக்கில், ‘‘2011-ம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளோம். ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக எங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க பள்ளிக்கல்வித்துறை மறுத்து விட்டது. 2011-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த எங்களை தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தக்கூடாது’’ என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பணன், மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கட்டாயக்கல்வி பெறும் உரிமை சட்டம் தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் பிரிவு 23. ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பணி தொடர்பான நிபந்தனைகளை விதிக்கிறது. இந்த பிரிவின்படி, இந்த சட்டம் அமலுக்கு வரும்போது ஆசிரியர்களாக பதவியில் உள்ளவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், 5 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதன்படி, ஆசிரியர்களுக்கு முதலில் 5 ஆண்டுகளும், அதன் பின்னர் 4 ஆண்டுகளும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இதன்பின்னரும் கால அவகாசம் வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு, கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியர்கள் இருந்துள்ளனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பதவியில் இருக்க முடியும்.
எனவே, இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் தொடர முடியாது. எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் சட்டப்படி நிறைவேற்ற வேண்டும்.
தரமான கல்வியைப் போதிப்பதற்கு ஆசிரியர்களும் அனைத்து வகையிலும் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் தரத்தை சோதிக்கவே ஆசிரியர் தகுதித்தேர்வும் நடத்தப்படுகிறது.
சட்டப்படி இந்த தகுதி தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்றாலும், தமிழ்நாட்டில் அவ்வாறு நடத்தப்படவில்லை. எனவே, இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடத்த வேண்டும்.
தற்போது வரும் ஜூன் மாதம் இந்த தகுதித்தேர்வு நடத்த உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Sweet blog! I found it while browsing on Yahoo News.
ReplyDelete