மாணவர்கள் நீர் அருந்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளிகளில் ‘வாட்டர் பெல்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மாணவர்கள் நலன்
உடலுக்கு உணவை விட நீர்ச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளி நேரங்களில் பெரும்பாலும் தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு மயக்கம், படபடப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இச்சூழலில், தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் உடல்நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, மாணவர்களிடையே தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் விதமாக, ‘வாட்டர் பெல்' எனும் புதிய திட்டத்தையும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
‘வாட்டர் பெல்’ திட்டம்
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
நீர்ச்சத்து குறைபாடு மாணவர்களின் அறிவாற்றல், கவனம், கல்விச் செயல்பாடுகளைக் கணிசமாகப் பாதிக்கிறது. பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும்போது, அதன் பலன் அதிகமாகக் காணப்படும். எனவே, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, ‘வாட்டர் பெல்' எனும் செயல் திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்
பள்ளி நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவித்தால், மாணவர்கள் வகுப்பறையில் விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க முடியும். மாணவர்களின் நினைவாற்றலும், அறிவாற்றலும் மேம்படும். அவர்களை உற்சாகமாக வைத்திருக்கும். தலைவலிக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகும். பள்ளி நேரங்களில் தண்ணீர் குடிப்பதால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்து தண்ணீர் பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் தண்ணீர் குடிக்க காலை 11 மணிக்கும், மதியம் 1 மணிக்கும், மாலை 3 மணிக்கும் ‘வாட்டர் பெல்’ அடிக்கலாம்.
வழக்கமான மணியில் இருந்து தண்ணீர் மணிக்கும் வேறு மணியைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் குடிக்க மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே செல்லக் கூடாது. வகுப்பறையில் தண்ணீர் குடிக்க 2 முதல் 3 நிமிடம் நேரம் வழங்க வேண்டும். மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம், பள்ளிகளில் நாளை 30.06.2025 (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment