சாதாரண தலைவலி வந்தாலே அலுத்து சலித் துப் போகிறோம் நாம். நம்மால் நடமாடவே முடியாமல் போனால்...? நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், 'தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்தான்' என்று நிரூபித்திருக்கிறார்.மத்திய கப்பல் துறையில் பணியாற்றிய போது, ராதாகிருஷ்ணனுக்கு(57) வயது 25. அப்போதுதான் அவர் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தார். இள மையின் கனவுகளில் ஊஞ்சலாட வேண்டிய அவரது வாழ்க்கையில் விதி வேறு விதமாக குறுக்கிட்டது. தசைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய மூளையிலுள்ள நரம்புகள் செயலிழந்து போயின.
'மோட்டார் நியூரான்' என்ற நரம்புகள், நம் உடலிலுள்ள தசைகளின் இயக் கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இவை செயலிழந்தால் தசைகள் சுருங்க ஆரம்பித்துவிடும். நம் இயக்கம் தடைப்பட்டு விடும். பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்தான்.'ஹாக்கிங் ஒரு வகையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறலாம். எனது அதிர் ஷ்டம், தசைச் சுருக்கம், ஐந்து - ஆறு ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்தது. அதன் பின் நின்று விட்டது' என்கிறார் ராதாகிருஷ்ணன்.இவரை சோதித்த டாக்டர்கள், இன்னும் ஐந்து ஆண்டுகள் உயிருடன் இருந்தால் அதிசயம் என்று கூறியது 1977ல். அதன் பின், 1983ல் பிரபல ஆயுர்வேத மருத்துவமனையில் சேர்ந்து ஓரளவு குணமடைந்தார்.நோயின் காரணமாக வேலையை விட்டவர், கேரளா பல்கலைக்கழகத் தில் கிளார்க்காக சேர்ந்தார். அங்கு கணித்துறைப் பேராசிரியர் நம்பூதிரி, கணித்துறை மற்றும் அறிவியல் துறையில் ஆவணங்களை தட்டச்சு செய்யும், 'டெக்' என்ற முறையை இவருக்குக் கற்றுக் கொடுத்தார். அதில் தேறிய பின், பல்வேறு பத்திரிகைகளுக்கு அதைச் செய்து கொடுத்தார்.
வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக வீடு கட்டினார். கடனுக்கான வட்டி கட்டுவதற்கு வாங்கிய சம்பளம் போதாததால், 'டெக்'கை வியாபார ரீதியில் வளமாக்கத் துணிந்தார். இவரது சகோதரர்களின் உதவியுடன் 1994ல் 'ரிவர் வேலி டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தைத் துவக்கினார். ஈரானைச் சேர்ந்த கவேஹ் பஜர்கன் என்பவர் இவரது பங்குதாரர் ஆனார்.அதன்பின், சர்வதேச அளவில் அறிவியல் பத்திரிகைகளைத் தயாரிக்கும் பணி இவருக்குக் கிடைத் தது. இன்று ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருமானம் தரும் நிறுவனத்தின் சொந்தக்காரர் ராதாகிருஷ்ணன். 130 ஊழியர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். காலை 10 மணிக்கு முன்பாக எந்நேரத்திலும் வரலாம். எட்டு மணி நேரம் வேலை முடித்துப் போகலாம். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அலுவலகத்தில் வலம் வருவார். தனக்கு என்று தனியாக அறை அமைத்துக் கொள்ளாமல் ஊழியர்களுடன் இருப்பது இவரது எளிமைக் குணம்.
'என்நோயை மறைத்து திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை' என்ற இவர், இவரது நிறுவனத்தில் வேலை பார்க்கும் வித்யா என்பவரை ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.இவரது நிறுவனம் வெற்றி பெற மற்றொரு காரணம், மென்பொருளை இவர் இலவசமாக வழங்குவதுதான். திருவனந்தபுரத்திலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள மலையின்கீழ் என்ற இடத்தில் இவரது 'ரிவர் வேலி டெக்' நிறுவனம் இவரைப் போலவே கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||