வரும் 2011ம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. சராசரி புத்திசாலித்தனத்துடன், கடின உழைப்பு இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம்,'' என வாஜிராம் மற்றும் ரவி ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இயக்குனர் ரவீந்திரன் கூறினார்.
அவர் கூறியதாவது: சேலத்தில் பி.எஸ்சி.,யும், டில்லி பல்கலையில் எம்.ஏ., - எல்.எல்.பி., படித்தேன். கடந்த 30 ஆண்டுகளாக டில்லியில் வாஜிராம் மற்றும் ரவி ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம், பொது அறிவு பாடங்களுக்கும், நேர்முகத் தேர்விற்கும் பயிற்சி அளிக்கிறேன். இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற 875 பேரில், 330 பேர் வாஜிராம் மற்றும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இத்தேர்வில் 2, 3, 5, 6, 7, 8 ஆகிய ரேங்க்களை பெற்றவர்கள், எங்கள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள். கடந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை, பத்து ஆண்டுகளாக அகில இந்திய அளவில் முதல் ரேங்க்கை எங்கள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் தான் பெற்று வருகின்றனர்.
தற்போதைய யூ.பி.எஸ்.சி., தேர்வு முறை, 1979ம் ஆண்டு முதல் 32 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக செயல்பட்டு வருகிறது. இதில் மூன்று கட்டமாக தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவு மற்றும் ஒரு விருப்பப் பாடம் இடம்பெறும். 21 பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு மே மாத மத்தியில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மெயின் தேர்வு எழுதலாம். மெயின் தேர்வில், பொது அறிவு(இரண்டு தாள்கள்), முதல் விருப்பப் பாடம்(இரண்டு தாள்கள்), இரண்டாவது விருப்பப் பாடம்(இரண்டு தாள்கள்), கட்டுரை, ஆகியவை இடம்பெறும். இவை முதுநிலை பட்டப் படிப்பு அளவில் இருக்கும். இத்தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க்கிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மெயின் தேர்வில் கட்டாய ஆங்கிலம், ஏதாவது ஒரு இந்திய மொழி ஆகிய இரு பாடங்களும் இடம்பெறும். ஆங்கிலம், இந்திய மொழியில் தேர்ச்சி பெற்றால் போதும். இவை பிளஸ் 2 அளவில் இருக்கும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
யூ.பி.எஸ்.சி., 2011ம் ஆண்டிலிருந்து முதல்நிலைத் தேர்வில் மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, யூ.பி.எஸ்.சி., வெளியிடவுள்ளது. இதன்படி, முதல்நிலைத் தேர்வின் பெயர், "சிவில் சர்வீஸ் ஆப்டிட்யூட் டெஸ்ட் (சி.எஸ்.ஏ.டி.,)' என மாற்றப்படும். முதல்நிலைத் தேர்வில் உள்ள பொதுஅறிவுப் பகுதி தொடரும். விருப்பப் பாடத்திற்கு பதிலாக, "ஆப்டிட்யூட்' டெஸ்ட் இடம்பெறும். இந்த இரண்டு பகுதிகளும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்படும். கேள்வித்தாள், சரியான விடையை தேர்வு செய்யும் முறையில் அமைந்திருக்கும். 2010ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு, பழைய முறையிலேயே நடைபெறும். மெயின் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து, யூ.பி.எஸ்.சி., தலைவர், ஒரு குழுவை அமைத்துள்ளார். அக்குழுவின் பரிந்துரையின்பேரில், மெயின் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆனால், 2013ம் ஆண்டில் தான் மெயின் தேர்வில் மாற்றங்கள் வரும் எனத் தெரிகிறது.
கிராமப்புற மாணவர்கள், விருப்பப் பாடத்தில் திறமையானவர்களாக இருந்தனர். "ஆப்டிட்யூட்' டெஸ்டில் நகர்ப்புற மாணவர்கள் திறமையானவர்கள். முதல்நிலைத் தேர்வில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்களால், கிராமப்புற மாணவர்கள் சிரமப்படலாம். அது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே இருக்கும். அதன்பிறகு, கிராமப்புற மாணவர்களும், "ஆப்டிட்யூட்' டெஸ்டிற்காக படித்து சிறப்பாக செயல்பட துவங்கிவிடுவர். கிராமப்புற மாணவர்கள் கணிதத்தில் திறமையானவர்களாக இருப்பதால், "ஆப்டிட்யூட்' டெஸ்டில் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புள்ளது. அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள், வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கையில், பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் பயிற்சி பெறுபவர்களில் பெண்களில் பங்கு 15 - 20 சதவீதமாக இருந்தது. அது தற்போது 30 - 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராப்புற மாணவர்கள் மற்றும் பெண்களிடம் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் பாடச்சுமை அதிகம் தான். மெயின் தேர்வில், பொதுஅறிவு, இரண்டு விருப்பப்பாடங்கள் ஆகியவை, மூன்று முதுநிலை பட்டங்களுக்கு படிப்பதற்கு இணையானது. தேர்ச்சி பெற கடின உழைப்பு மிகவும் முக்கியம். சராசரி புத்திசாலித்தனத்துடன், கடின உழைப்பு இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மனஉறுதியுடன் இருந்தால் தான், வெற்றி பெற முடியும். மற்ற தேர்வுகளுடன், இதையும் சேர்த்து எழுதலாம் என நினைத்தால் வெற்றி பெற முடியாது. பட்டப்படிப்பு படிக்கும்போதே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக வேண்டும். பொது அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். செய்தித்தாள்களை வாசிக்காமல், புத்தகத்தைப் போல நினைத்து படிக்க வேண்டும்.
மத்திய அரசு வெளியிடும் யோஜனா, அதன் தமிழ் பதிப்பு திட்டம் ஆகியவற்றை படிக்க வேண்டும். இவற்றில் அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்து கட்டுரைகள் இடம்பெறும். "டிவி' மூலமாகவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடனும், தேர்விற்கு தயாராகும் மாணவர்களுடனும் கலந்துரையாட வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை படிக்க வேண்டும். அதில் 10 - 12 வரையிலான இந்திய வரலாறு, ஜியாகிராபி புத்தகங்கள், பிளஸ் 1, பிளஸ் 2 இந்திய பொருளாதார புத்தகம், 8 - பிளஸ் 1 உயிரியல், இயற்பியல், வேதியியல் புத்தகங்கள் ஆகியவற்றை படிக்க வேண்டும். தேசிய புத்தக டிரஸ்ட் வெளியிடும், அரசியலமைப்புச் சட்டம், இந்திய சுதந்திரப் போராட்டம் ஆகிய புத்தகங்களை படிக்க வேண்டும்.
பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். பொதுப்பிரிவினர் 21 முதல் 30 வயது வரையும், ஓ.பி.சி., பிரிவினர் 33 வயது வரையும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 35 வயது வரையும் தேர்வு எழுதலாம். பொதுப்பிரிவினர் 3, ஓ.பி.சி., 7, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 14 முறை தேர்வு எழுதலாம். நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வில், நேர்மை, பிரச்னைக்கு விரைவாக தீர்வு காணும் முறை, பகுத்தாய்வு செய்யும் முறை ஆகியவை சோதிக்கப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல் தமிழக மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 875 பேரில், 125 பேர் தமிழக மாணவர்கள். மேலும், தமிழகத்தில் ஓ.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகிறது. இவர்கள், அதிகளவில் கிராமப்புறங்களிலிருந்து வருபவர்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வில், 1993ம் ஆண்டு ஓ.பி.சி., இடஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், தமிழகத்தில் 1930ம் ஆண்டு முதலே, ஓ.பி.சி., இடஒதுக்கீட்டு முறை உள்ளது. இதனால், தமிழகத்தில் படித்த ஓ.பி.சி., மாணவர்கள் அதிகம். அவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் ஓ.பி.சி., இடஒதுக்கீட்டை பயன்படுத்தி தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், வடமாநிலங்களில் 1993ம் ஆண்டு தான் ஓ.பி.சி., இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தது. தமிழக மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதைப் பார்த்து, மற்ற மாணவர்களும் உத்வேகத்துடன் படிக்கின்றனர்.
தமிழகத்தில் கல்வியறிவு அதிகம். தமிழக மாணவர்களின் கடின உழைப்பும், அதிகளவிலான பயிற்சி மையங்கள், உதவி செய்பவர்கள், இலவச பயிற்சி ஆகியவையும் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறக் காரணம். சிவில் சர்வீஸ் தேர்வில் டில்லி, உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, தமிழகம், பஞ்சாப் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தேர்வு எழுதலாம். தமிழில் எழுதலாம் என்பதும், தமிழகத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற காரணம். இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||