உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தியாக வேங்கைக்கு இரும்புத்திரை போடுவதா?

வாஸ்கோடகாமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498-ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள். வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையிட்டு தீராத உட்பகை உருவாவதற்கும் காரணமாக இருந்தார்கள்.
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுகிற உணர்வும், ஊக்கமும், உத்வேகமும் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே உருவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் தென்பகுதியிலும், நடைபெற்றதை யாரும் மறுக்க இயலாது. சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதல் குரல் தென்னகத்திலிருந்துதான் எழுந்தது என்பது சரித்திரம் மறைத்துவிட்டிருக்கும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்தக் கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும், தங்களின் ஆட்சி, அதிகாரத்துக்கு ஆபத்து வந்தபொழுது ஏற்பட்டவை என்பதால் இவை மக்கள் விடுதலைக்கான போராட்டங்களாகவும், நாடு தழுவிய ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களாகவும் அமையவில்லையென இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (​IC​HR​ - Indi​an Coun​cil of Histori​c​al Rese​ar​ch) கருத்துத் தெரிவிக்கிறது. இது அறியாமையின்பாற்பட்ட, உண்மை நிலைமை உணராத கூற்று என்பதை நம்மில் யாரும் ஏன் குரலெழுப்பி மறுக்கவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
1800-1801-ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் உருவான புரட்சியும், போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், மலபார், கர்நாடகப் பகுதி வரையிலும் பரவி, குவாலியர் வரையிலும் எட்டியிருந்தது. இந்த ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சியை இந்திய வரலாற்று ஆய்வுக்குழு ​(IC​HR)​ ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என்பதுதான் புதிராக இருக்கிறது. அவர்களுக்கு இந்த மாமன்னர்களின் சுதந்திர வேட்கையும், மக்களை ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியும் தெரியாமல் போனதா? இந்திய வரலாற்றில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் போர்க்களம் கண்ட அரிய, தீரமிக்க நிகழ்ச்சியை இந்திய மண்ணில் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போராட்டம் அல்ல என எந்தச் சூழ்நிலையிலும் மறுத்துவிட இயலாது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (1800-1801) நடைபெற்ற இந்த ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி, ஏன் உரிய முறையில், இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் இன்றும் புதிராகவே உள்ளது.

இந்தியாவின் தென்பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அடியெடுத்து வைத்தார்கள். பின்னர்தான் கொல்கத்தா சென்றார்கள். எனவே, ஆங்கிலேயர்கள் முதன் முதலாக அடியெடுத்து வைத்த இந்தத் தென்பகுதியில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியை முதல் சுதந்திரப் போராட்டமாகப் பதிவு செய்யாமல், இதற்குப் பின்னர் ஐம்பத்தாறு ஆண்டுகள் கழித்து வடக்கே நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை (sepoy mutiny)​ இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவு செய்வது எந்த வகையில் நியாயம்?

இத்தகைய சரித்திரப் பதிவு தென்பகுதி மக்களின் உச்சபட்ச தியாகத்தையும், போராட்டத்தையும் சிறுமைப்படுத்திவிட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது.

இந்த உண்மை நிலைமைகளை வெளிப்படுத்துவதால், 1857-ம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவதாகக் கருதக்கூடாது. ஆனால், சரித்திர நிகழ்வுகளை காலத்தவறின்றி (​Chronologi​c​al re​cording)​ வரிசைப்படுத்திப் பதிவு செய்ய வேண்டும் என்பது சரித்திர ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கோட்பாடாகும். தவறான பதிவை நாம் திருத்தி எழுதியாக வேண்டும். தமிழன் செய்த தியாகம் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுவதை நாம் வாய்மூடி அங்கீகரிப்பது ஏன்?

இதில் சில சரித்திர ஆசிரியர்களும், இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழுவும் ​(IC​HR)​ தவறிழைத்துவிட்டதாகவே கருத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ராஜய்யன்தான் தன்னுடைய வரலாற்று நூலான "தென்னாட்டுக் கிளர்ச்சிகள்' (நர்ன்ற்ட் ஐய்க்ண்ஹய் தங்க்ஷங்ப்ப்ண்ர்ய் 1800-1801)என்கிற ஆங்கில வரலாற்று நூலில் இதுபற்றி சரியாகப் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்தக் கிளர்ச்சியும், புரட்சியும்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். (ர.ட.சர். 36714/2006) பின்னர் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவினரிடம் ​(IC​HR)​ தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். அந்த ஓய்வறியாத வரலாற்றுப் பேராசிரியர் ராஜய்யனை, மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு நாளில், வாழ்த்துவதும், வணங்குவதும் தமிழ் மக்களின் கடமையாகும்.

இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழு ​(IC​HR)​1800-1801-ம் ஆண்டில் நடைபெற்ற ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி பற்றியும், ஆயுதப் போராட்டங்கள் பற்றியும், போராடியவர்களின் நோக்கங்கள், சிந்தனைகள், தேசியப்பற்று, இந்திய ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை என்றே அறிய முடிகிறது.

1800-1801-ம் ஆண்டில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மாமன்னர் மருதுபாண்டியர்கள், திருச்சி மலைக்கோட்டை ஆற்காடு நவாப்பு அரண்மனை வாயிலிலும், திருவரங்கம் கோயில் வாசலிலும் 1801-ம் ஆண்டு ஜூன் 16-ம் நாள் ஒட்டிய போர் பிரகடனம் (War De​cl​ar​ation) வரலாற்றில் பிரசித்தி பெற்றதாகும்.

ஆங்கிலேயருக்கு எதிரான இந்த யுத்தப் பிரகடனத்தில் மருதுபாண்டியர்கள், ஜாதி, மதம், பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களும் ஆயுதமேந்தவும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவும் தயாராக வேண்டுமென அழைப்பு விடுக்கிறார்கள். தன்னுடைய ஆளுகைப் பகுதிக்காகவோ அல்லது தன்னிடம் நட்புக் கொண்டவர்களுக்காகவோ மட்டும் அவர்கள் போராடவில்லை. மாறாக, இந்த மண்ணுக்கும், தங்கள் தங்கள் பகுதிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் சேர்த்தே போராடத் தயாரானார்கள் என்பதுதான் சரித்திர உண்மை. அவர்களது உரிமைகளை மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

தங்களது போராட்டங்களுக்கு ஆதரவளிக்காதவர்களைக்கூட, அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என மருதுபாண்டிய மன்னர்கள் வற்புறுத்தவில்லை. மாறாக, அவர்கள் யுத்த களத்துக்குச் செல்லும் தங்களை வாழ்த்தினால் மட்டும் போதும் எனத் தெரிவிக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பசி, பட்டினியால் வாடுகிறார்கள், பசிக்குச் சோறு இல்லாமல் சோற்றுக் கஞ்சியே சாப்பிடுகிறார்கள், நம்முடைய கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து கொண்டிருக்கிறது என நாட்டு மக்களுக்குப் பிரகடனப்படுத்தினார்கள் சிவகங்கைச் சீமையை ஆண்ட அந்தக் குறுநில மன்னர்கள். இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து குவாலியர் வரையிலும், தூதுவர்களை அனுப்பி ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்கள்.

போர்ப் பிரகடனத்தின் இறுதியில் ஆங்கிலேயர்களின் "அசைக்க முடியாத எதிரி'' என்றுதான் கையொப்பமிடுகிறார் மன்னர் மருது. இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போர்ப்பிரகடனம் பதினெட்டாம் நூற்றாண்டிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும்.

மாமன்னர் மருதுபாண்டியர்களால் அறிவிக்கப்பட்ட இந்தப் போர்ப் பிரகடனம் பற்றிய செய்தியையும், ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களையும் அவர்களது வாரிசுகளையும், சிறுவர்கள் என்றுகூடப் பார்க்காமல் போராளிகள் 500 பேருடன் திருப்பத்தூர் கோட்டையில் கொடூரமாகத் தூக்கிலிட்ட துயரமான செய்திகளையும், அப்பொழுது இங்கு பணியாற்றிய ராணுவ அதிகாரி ஒருவர் மூலம் அறிந்து, அவரது வேண்டுகோளின்படி 1813-ம் ஆண்டு இங்கிலாந்தில், ஜே.கோர்லே என்பவர் புத்தகமாக வெளியிட்டுள்ளார். (`M​A​H​R​A​DU AN IN​D​I​AN ST​O​RY OF THE BE​G​I​N​N​I​NG OF THE NI​N​E​T​E​E​N​TH CE​N​T​​URY By J.GO​U​R​L​AY) இந்தப் புத்தகத்தில், மருதுபாண்டியர்களின் குடும்பத்தாரையும், சிறுவர்களையும் போராளிகள் 500 பேரையும் ஆங்கில ராணுவத்தினர், எந்தவிதமான அடிப்படை வழிமுறைகளையும் பின்பற்றாமல் கொடூரமாகத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள் என்கிற கொடுமையான செய்தியை ராணுவ அதிகாரி என்பதால் என்னால் வெளி உலகத்துக்குத் தெரிவிக்க முடியாது. எனவே, தாங்களாவது உலகத்துக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு ஏற்பத்தான், இந்த நூலை வெளியிடுகிறேன் என்று நூலாசிரியர் ஜே.கோர்லே முன்னுரையில் தெரிவிக்கிறார்.

மேலும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தைக் குறிப்பிடுகிறபொழுது, கி.பி.85-ல் ரோமானியத் தளபதி அக்கிரிகோலா இங்கிலாந்து நாட்டை முற்றுகையிட்டிருந்த நிலையில் பிரிட்டானியப் படைகளை ஒருங்கிணைத்து, ரோமானிய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற பிரிட்டானியப் படையிடம், ஆற்றல்மிக்க தளபதிகளில் ஒருவரான கால்காகஸ் (A.D.85 Calg​a​cus' spe​ech to his troops)​ தன்னுடைய படை வீரர்களைப் பார்த்து வீரம் செறிந்த உரை நிகழ்த்துகிறான். உணர்ச்சிப் பிரவாகமாக மாறுகிறது பிரிட்டானியப் படை. அந்த வீரம் செறிந்த உரைக்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தை நூலாசிரியர் ஒப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் நேர்மையும், நெஞ்சுரமும், விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் கொண்ட மாவீரர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தையும், பிரிட்டானியத் தளபதி கால்காகஸ் ராணுவ வீரர்களிடம் ஆற்றிய உரையையும் அவர் ஒப்பிடுகிறார்.

1813-ல் ஆங்கில நாட்டைச் சேர்ந்த ஜே. கோர்லே மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தை கி.பி. 85-ம் ஆண்டில் பிரிட்டானியத் தளபதியின் உரைக்கு ஒப்பிட்டு இருவரின் சுதந்திர வேட்கையையும், நாட்டுப் பற்றையும், நெஞ்சுரத்தையும் பாராட்டி அந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகப் பதிவு செய்கிறார்.

ஆனால், இந்தியாவில் உள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் குழு ​(IC​HR)​ 1800-1801-ல் நடைபெற்ற ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்தை முறைப்படி அங்கீகரித்துப் பதிவு செய்ய மறுக்கிறது. வேதனையானது, வினோதமானது, வேடிக்கையானது என்றெல்லாம் கூறுவதைவிட மாமன்னர் மருதுபாண்டியர்கள் தமிழர்களாகப் பிறந்ததுதான் இதற்குக் காரணமானது என்றுதான் நம்மால் கூறமுடிகிறது.

எந்தநாடு இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்யும் என்று எதிர்பார்த்தோமோ அந்த நாட்டில் இந்தச் செய்தி உரிய முறையில் வெளியாகி உள்ளது. ஆனால், எந்த நாட்டில் இந்தச் செய்தி அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமோ அந்த நாட்டில், இந்தியத் திருநாட்டில், இந்தச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்படுகிறது, தென்னகத்துத் தியாக வேள்வியை இரும்புத்திரை போட்டு மறைக்கும் இந்த முயற்சியை நாமும் முறியடிக்க மனமில்லாமல் மௌனம் சாதிக்கிறோம்.

இன்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு நாள். இந்த மண்ணை நேசிக்கும்,ஏன், இந்த மண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டால், உயிரைத் துச்சமென மதித்துப் போராடும் மருதுபாண்டியர்களின் வழிவந்தவர்களின் உணர்வுகள் முற்றிலும் மறைந்து போய்விடவில்லை. அவர்கள் சார்பாக தெரிவிப்பதெல்லாம், மாமன்னர் மருதுபாண்டியர்களின் நிகரற்ற, உலகம் போற்றும் வீரத்தை போர்க்களத்தில் எதிர்கொண்ட ஆங்கில ராணுவத்தின் தளபதி ஜெனரல் வெல்ஸ் மனம் திறந்து பல படப் பாராட்டினார் - பதிவும் செய்து வைத்திருக்கிறார். (Milit​ary Reminis​cen​ces of Gen.​ Welsh)​

அவர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும் சுயமரியாதையையும் கி.பி. 85-ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

குப்பை இல்லா நல்லுலகம்?

உலகில் சீனாவுக்கு அடுத்ததாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையைப்பெற்ற இந்தியாவில் மக்கள் நெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சுகாதாரக்கேடு, புதுப்புது நோய்கள், குடிநீர்ப் பஞ்சம், உணவுப் பற்றாக்குறை என பல பிரச்னைகள் பெருகி வருகின்றன. இவற்றில் பெரும் ஆபத்தை விளைவிப்பவை பெருகிவரும் மாசுக்கள்தான்.

வழக்கம்போல மாசுபடுதலுக்கு முக்கிய காரணம் ரசாயனப் பொருள்களின் பயன்பாடு, மரங்களை அழித்தல் போன்றவற்றைக் கூறலாம். இப்படியே நிலைமை பூதாகரமாகிப் போவதால் புவிவெப்பமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு என பல கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார். கிண்டலோ..சீரியúஸô இன்றைய நிலையில் குப்பைகள் குவிந்த நாடு இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.

இல்லாவிட்டால் வெளிநாடுகளிலிருந்து இலவசமாகக் கதிரியக்கக் குப்பைகளை இறக்குமதி செய்வோமா? ஏதோ இலவசமாகக் கொடுக்கிறார்களே என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீணான கம்ப்யூட்டர்கள், கதிரியக்க உலோகத் துண்டுகள், பழைய இரும்புப் பொருள்கள் என வாங்கிக் குவித்து நாட்டை மேலும் சீரழிக்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகள் நல்லது செய்வது போல செய்து அவர்கள் நாட்டை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

இது தேசிய அளவில் செய்யப்படும் காரியம். ஆனால் மாநிலம் வாரியாக சேரும் குப்பைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

நாட்டில் நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அண்மையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே நாளில் 150 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதேநிலை தினமும் ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகும்?

குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

ஆனாலும், இதை அனைவரும் பின்பற்றினால்தான் குப்பைகள் இல்லா நல்லுலகம் அமையும்.

நம்மில் பலர் குப்பைகளை முறையாக அகற்றுவதில் அலட்சியம் காட்டுகிறோம்.

இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் மட்டுமே சுகாதாரத்தைப் பேணலாம்.

மக்காத குப்பைகள் என பார்த்தால் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கூறலாம்.

மக்காத குப்பையால் மண்ணில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீரை மண் உறிஞ்சாத நிலை ஏற்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.

எனவே, இதைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவருமே அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக, வீட்டில் உள்ள குப்பைகளை உரமாக மாற்ற சிறிய கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தலாம். பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குமரி மாவட்டம் மட்டும் முன்னோடியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. எனவே மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும்.

கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.

இதுபோல அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே ஒன்றிணைந்து செயல்பட்டால் குப்பைகளை அறவே இல்லாது அகற்றலாம். சுகாதாரக்கேட்டையும் தவிர்க்கலாம்.

மேலும், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், சுயஉதவிக் குழுவினர், பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் குப்பைகளை அகற்றுவதைச் சேவையாகச் செய்யலாம்.

சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.

இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம்.

இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கருப்பினத் தலைவரே வருக, வருக...

உலகில் கருப்பின மக்கள் சந்தித்த துன்பமும், துயரமும் சொல்லி மாளாது. தோல் கருப்பாய் பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக அவர்கள் இனவெறி எனும் பேயால் ஆட்டிப்படைக்கப்பட்டனர். அதிலும், அமெரிக்க கருப்பர்கள் வெள்ளையர்களால் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்பட்ட பரிதாபத்தை நினைத்தால் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது. அமெரிக்கக் கருப்பின மக்கள் இனவெறி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை மனிதநேயம் படைத்த சில வெள்ளையர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அப்படி கருப்பின மக்களின் துயரைக் கண்டு 145 ஆண்டுகளுக்கு முன்பு பொங்கி எழுந்தவர்தான் அமெரிக்க வெள்ளை இனத்துப் பெண்மணியும், எழுத்தாளருமான ஹேரியட் பீச்சர் ஸ்டோ. அமெரிக்காவில் கருப்பர் இன மக்கள் எப்படியெல்லாம் இழிவாக நடத்தப்படுகின்றனர், சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்பதை "டாம் மாமாவின் குடில்' என்ற கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டினார்.

அந்தக் கதையில் ஒரு காட்சியைக் காண்போம்: வெள்ளை முதலாளியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஜார்ஜ். இவன், நெடுந்தொலைவு ஓடிவந்து, பிரிந்து போன தன் மனைவியை, குழந்தையைப் பார்க்கிறான். அவனது குழந்தை மறுநாள் ஏலச்சந்தையில் விற்கப்படுகிறது என்பதை அறிந்த மனைவியும் ஓடிவருகிறாள். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள்.

அப்போது அவள் அவனுடைய உடம்பைப் பார்த்துவிட்டு, "ஏன் இந்த ரத்தக்காயங்கள்' என்று கேட்கிறாள். "எல்லாம் எஜமானன் கொடுத்த பரிசு. இப்புவியில் நாம் பிறந்ததே பாவம். நாம் மனிதர்கள் அல்ல. பண்டங்களைவிடக் கேவலமான பிண்டங்கள். இதோ பார், என் உடம்பெல்லாம் என் எஜமான் சவுக்கால் அடித்த ரத்தக் காயத்தின் தழும்புகள்' என்கிறான். உடனே, "ஏன் உன்னை எஜமான் சவுக்கால் அடித்தான்' என்று வினவுகிறாள் மனைவி.

"ஏன் தெரியுமா? என் எஜமான் ஒவ்வொரு நாளும் என்னை சவுக்கால் அடிக்கிறான். அரை வயிற்றுப் பசி தணிக்க அவன் வீசி எறியும் ரொட்டித் துண்டுகளை, நான் பிரியமாக வளர்த்த நாய்க்குக் கொடுத்தேன். அதை ஒருநாள் அவன் பார்த்துவிட்டான். அந்த நாய் செல்லமாக என்னிடம் கொஞ்சி விளையாடுவது அவனுக்குப் பொறுக்கவில்லை.

"நான் உனக்குக் கொடுத்த ரொட்டித்துண்டுகளை நாய்க்கு ஏன் கொடுத்தாய்?' என்று கேட்டான்.

"எஜமானே! இந்த நாயை நான் ஆசையோடு வளர்க்கிறேன். இந்த நாய் மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன்' என்றேன். நான் கூறியதைக் கேட்ட அவன், பொங்கிப் போனான். "ஆசை, பாசத்துக்கு எல்லாம் இங்கே வேலை கிடையாது. உன் மனைவி, தாயிடம்கூட அன்புகாட்ட உனக்கு அனுமதி இல்லாதபோது, ஒரு நாயிடம் எப்படி அன்பு காட்டுவாய்?' என்று கண்டித்தான். நான் பிள்ளையைப்போல் செல்லமாக வளர்த்த நாயை, நானே அடித்துக்கொல்ல ஆணையிட்டான்.

மறுத்தேன். என்னை மரத்தில் கட்டிவைத்து உதைத்தான். என் கண் எதிரே நாயையும் சித்திரவதை செய்தான். பின்னர் அதன் கழுத்தில் ஒரு கல்லைக் கட்டிக் குளத்தில் வீசினான். அது கொஞ்சம் கொஞ்சமாகக் குளத்தில் மூழ்கியது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியாக அந்த நாய் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. "என் பிரியமானவனே, என்னை நீ காப்பாற்ற வரவில்லையே!' என்று ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிச் செத்துப்போனது. நம்மைப் படைத்தவனிடம் இரக்கம் இல்லை. நீதி இல்லை, இப்படி வாழ்வதைவிட மடிவதே மேல் என்றான் கண்ணீர்மல்க. எதிரில் நிற்கும் மனைவியின் கண்களும் கலங்குகின்றன. இப்படி ஒரு காட்சியை அமைத்திருக்கிறார்.

அமெரிக்கக் கருப்பின மக்கள் வெள்ளையர்களின் கால்களால் நசுக்கப்பட்டதை இதைவிட எப்படி எடுத்துக்காட்ட முடியும்? முடியவே முடியாது.

ஹேரியட் பீச்சர் ஸ்டோவின் இந்தக் கதை உலகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனினும் என்ன பயன்? உலகே வெள்ளையர்கள் ஆதிக்கத்தால் அடிமைப்பட்டுக் கிடந்ததால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. ஆனால், ஹேரியட் பீச்சர் ஸ்டோவின் எழுத்து அமெரிக்காவில் மட்டும் கருப்பின உரிமை ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 1863-ல் கருப்பின மக்களின் உரிமையை நிலைநாட்ட ஆபிரகாம் லிங்கன் பிரகடனம் செய்தார்.

அமெரிக்காவில் கருப்பர் இனத்தை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆபிரகாம் லிங்கன் விதைத்த உணர்வு விதைக்கு நீரூற்றி உயிர் கொடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங். லிங்கன் வழி நின்று கருப்பின மக்களின் அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிந்தார்.

அமெரிக்காவில் கருப்பின மக்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டாலும் ஒரு மனிதனுக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்தன. இயற்கை உரிமைகளே மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் உரிமையை கனவில்கூட அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதநிலை.

கருப்பர்கள் மனிதர்களாவே கருதப்படாத, நீக்ரோக்கள் மனிதர்கள் அல்ல என்று நீதித்துறையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க நாட்டிலே இன்று கென்ய நீக்ரோ தந்தைக்குப் பிறந்த பராக் ஒபாமா அதிபராகி இருக்கிறார்.

இந்த சரித்திர நிகழ்வை உலகம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒபாமா அதிபர் ஆனதன் மூலம் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கனவுகள் நனவாகியுள்ளன. 1966-லேயே "மனிதன்' நாவல் மூலம் "டக்ளஸ் டில்மன்' என்ற நீக்ரோவை அமெரிக்க அதிபராக்கி அழகுபார்த்தவரல்லவா அண்ணா!

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டு வாசலுக்கு உள்ளேகூட நுழைய முடியாத ஒபாமாவால், எப்படி அதிபர் சிம்மாசனத்தில் அமர முடிந்தது. தன் சாதனைக்குக் காரணமாக அவர் சொல்வதெல்லாம், "ஆம், நம்மால் முடியும்' என்ற மூன்றே சொற்களைத்தான். தன் நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் அமெரிக்க அதிபராகிச் சரித்திரம் படைத்த வரலாற்று நாயகன், கருப்பின மக்கள் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தி பிறந்த இந்திய மண்ணுக்கு முதல் தடவையாக வருகை தர உள்ளார். ஒபாமாவின் இந்த வருகை அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. உறவு ரீதியாக அல்ல, கருப்பினத் தலைவர் என்ற உணர்வுரீதியாக.

இதனால் "உலகக் கருப்பின ஒப்பற்ற தலைவர் ஒபாமாவே வருக..வருக' என்று ஒவ்வொரு இந்தியரும் வாழ்த்தி வரவேற்போம். உரிய வகையில் கெüரவித்து வழியனுப்புவோம்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Kalvisolai | Disclaimer

The information contained in www.kalvisolai.com is for general information purposes only. The information is provided by www.kalvisolai.com and while we endeavour to keep the information up to date and correct, we make no representations or warranties of any kind, express or implied, about the completeness, accuracy, reliability, suitability or availability with respect to www.kalvisolai.com or the information, products, services, or related graphics contained on www.kalvisolai.com for any purpose. Any reliance you place on such information is therefore strictly at your own risk. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of www.kalvisolai.com.Through www.kalvisolai.com you are able to link to other websites which are not under the control of www.kalvisolai.com. We have no control over the nature, content and availability of those sites. The inclusion of any links does not necessarily imply a recommendation or endorse the views expressed within them. Every effort is made to keep www.kalvisolai.com up and running smoothly. However,www.kalvisolai.com takes no responsibility for, and will not be liable for, www.kalvisolai.com being temporarily unavailable due to technical issues beyond our control.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.