ஒரு பாட்டு முடிவதற்குள் 500லிட்டர் தண்ணீர்!


வளரும் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய பிரச்னை எரிசக்தித் தட்டுப்பாடுதான். குறிப்பாக, மின்சார விநியோகத்தில் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள நாம் படும் பாடு சொல்லி மாளாதது.

இந்நிலையில், இந்த பிரச்னைக்குத் தீர்வாக எளிய தொழில்நுட்பத்தில் - கை, கால்களை மட்டுமே இயக்கி தண்ணீர் இறைப்பதற்கான இயந்திரத்தை வடிவமைத்துள்ளார் தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரத்தநாடு தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் (61).
உங்கள் ஊரில் 50 அடி ஆழமுள்ள கிணறு இருந்தால் ஜப்பாரின் இந்த இயந்திரம் உங்களுக்குப் பயன்படக்கூடும்.

உங்கள் வீட்டு வாசலிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் தேக்கிவைக்கப்படும் நீரை வீட்டுக்குள் கொண்டுவரவும் பயன்படக்கூடும். ஜப்பாரின் இயந்திரத்துக்கு எந்த எரிசக்தியும் தேவையில்லை, மனிதசக்திதான். உங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைப் பாடிக்கொண்டு, சைக்கிள் மிதிப்பதுபோல நீங்கள் இந்த இயந்திரத்திலுள்ள பெடலைச் சுற்றினால், பாட்டு முடிவதற்குள் 500 லிட்டர் தண்ணீரை நீங்கள் இறைத்துவிடலாம்.

மின்சார சேமிப்பும் ஆச்சு, உடல் ஆரோக்கியமும் ஆச்சு.

வீட்டு உபயோகத்துக்கு மட்டும் அல்ல, குறு, சிறு விவசாயிகளின் தேவைகள், மலை பிரதேச மக்களின் தேவைகளையும்கூட இதன் மூலம் பூர்த்தி செய்யலாம். குறிப்பாக கழிவு நீர் அகற்றும் பணிகளுக்கும் சாக்கடைகள் தூர்வாரும் பணிகளில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தினால், மனிதக் கழிவுகளை அகற்றும் மோசமான பணிகளிலிருந்து ஓரளவுக்கு நம் துப்புரவுத் தொழிலாளர்களை மீட்டெடுக்கலாம்.

தான் உருவாக்கிய இயந்திரம் குறித்து ஜப்பார் கூறியது:

""மோட்டார் மெக்கானிக் தொழில் பயின்றது இதைக் கண்டுபிடிக்க உதவியது. ரொம்ப நாள் உழைப்பு இது. ஆனால், பொருளாதாரப் பின்னணி ஏதுமில்லாததால் இழுத்துக்கொண்டே போனது. இந்நிலையில்தான், சில ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக அடியக்கமங்கலத்தில் எஸ்.எம்.ஜெ. முகமது நிஜாமுதினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு என் மகன் வயதாகிறது.

ஆனால், அவரால்தான் என் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் அளித்த உதவியைப் பயன்படுத்தி ரூ. 2 லட்சம் செலவில் பல்வேறு வடிவமாற்றத்துக்கு பின்னர் இந்த இயந்திரத்தை உருவாக்கினேன். எளிய இயங்கு கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் இயந்திரம் இது என்பதால், இதற்கு இந்திய அரசின் காப்புரிமையையும் பெற்றுவிட்டேன். ஆனால், எனக்கு வயதாகிவிட்டது. வணிகரீதியாகத் தயாரிக்கவோ, விற்கவோ வசதி வாய்ப்பில்லை. அரசோ, தனியார் நிறுவனங்களோ முன்வந்தால் அவர்களிடத்தில் என் கண்டுபிடிப்பை அளிக்கத் தயாராக இருக்கிறேன். ரூ. 10 ஆயிரத்துக்கு இந்த இயந்திரத்தைச் சந்தையில் விற்கலாம். ஒரு பெரிய புரட்சியையே உருவாக்கலாம். காத்திருக்கிறேன்'' என்றார் ஜப்பார்.

உலகம் முழுவதும் மாசற்ற இயந்திரப் பயன்பாட்டுக்கான தேவை பெரிய அளவில் எழுந்துள்ள காலம் இது. அரசு ஜப்பாரின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமா?

1 comment:

  1. a wonderful efforts from Mr.Jaffer
    all the best
    god bless you

    rajakumar
    Villupuram

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||