× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தீவிரம் அமைச்சர் பொன்முடி தகவல்

என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 157 இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-வது சுற்று நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இதுவரை 89 ஆயிரத்து 585 மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 80 ஆயிரத்து 353 பேர் தான் சேர்ந்திருந்தார்கள். 4-வது சுற்று முடிவடைவதற்குள் கடந்த ஆண்டைவிட 10 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். இந்த சுற்று நிறைவுபெறும் போது இன்னும் சிலர் சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதனைத்தொடர்ந்து துணை கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது. அதிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களில் காலியாக இருக்கும் 4 ஆயிரம் இடங்கள் நிரப்புவது தொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுவரையில் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 4 ஆயிரம் கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக இந்த இடங்கள் நிரப்புவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது.

அதேபோல், அரசு கல்லூரிகளில் காலியாக இருக்கும் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களும் நிரப்பப்படும். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

கல்லூரி பேராசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக சொல்லி வந்தார்கள். இடையில் இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது. இப்போது கலந்தாய்வுக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுடையவர்களாக 5 ஆயிரத்து 408 பேர் இருக்கின்றனர். இவர்கள் 3 ஆயிரம் இடங்களில் மாறுதல் செய்து கொள்ள முடியும்.

ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வில் பங்கேற்று இடமாறுதல்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரு இடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும்போது, மூப்பு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படும். இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை கல்லூரி கல்வி இயக்குனரால் சரிபார்க்கப்பட்டு, உரிய தகுதியுடையவர்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் தமிழ்வழி பாடம் 2 இருக்கிறது. தமிழின் மரபுகள், தமிழன் தொழில்நுட்பம் ஆகிய 2 பாடங்கள் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டிலேயே கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது, தமிழ்வழி பாடம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் எல்லாம் தமிழில் மொழி பெயர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார். அதன்படி, தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||