திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கணவாய்பட்டியைச் சேர்ந்த ரேணுகாதேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
கணவாய்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியை, இந்த பள்ளி மாணவர்களை மிரட்டி அங்குள்ள கழிப்பறையை பலமுறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். எனவே கணவாய்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை மீதும், அவரை கண்டிக்காத பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மாணவர்கள் கழிவறைகளை சுத்தப்படுத்த கட்டாயப்படுத்திய விவகாரம் குறித்து புகார் தெரிவித்ததால் 3 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கி உள்ளார் என்று தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், தலைமை ஆசிரியையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், தலைமை ஆசிரியை மீதான புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கையை ஒரு வார காலத்திற்குள் எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.









No comments:
Post a Comment