“பொறியியல் கலந்தாய்வு முடிந்த பிறகு இருக்கும் காலியிடங்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதைப் போன்று நேரடி சேர்க்கை முறையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடப்பு கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கலந்தாய்வு வழக்கம்போல் இணையவழியிலே நடைபெறும்.
ஜூலை 22 முதல் 24-ம் தேதி வரை 3 நாட்கள் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன்பிறகு ஜூலை 25-ம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடங்கும். மாணவர் சேர்க்கை 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி நடைபெறும்.பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும். கலந்தாய்வு முடிவடைந்த பிறகு காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதைப் போல் நேரடி சேர்க்கை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பொறியியல் கலந்தாய்வை சிறந்த முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். சென்ற ஆண்டு 2 லட்சத்து 29 ஆயிரத்து 160 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 2 லட்சத்து 53 ஆயிரத்து 952 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக முதல்வரின் ‘நான் முதல்வன் திட்டம்’, அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, அதேபோல், இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிற ‘தமிழ்புதல்வன்’ திட்டம் போன்ற திட்டங்களால்தான் இந்த ஆண்டு இவ்வளவு அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேபோல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது.
பொறியியல் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். தொழில்நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் தான் அதிக எண்ணிக்கையிலான கிராமப்புற மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்தார்.
இதனால், கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளர் என்பது உண்மை. தமிழக முதல்வர் ஆரம்பக்கல்விக்கும், உயர்கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன் காரணமாகத்தான் இந்தியாவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக அதாவது 52 சதவீதமாக இருக்கிறது. இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்பதை யாரும் மறுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||