ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்த திரு. சிவா, ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திருமதி. சத்யா. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற மகனும், தர்ஷினி (13) என்ற மகளும் உள்ளனர். ஆதித்யா, குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.
கடந்த முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு ஆதித்யா வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால், அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. மாலையில், பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில், சீருடை அணியாமல் சாதாரண உடையில் ஆதித்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆதித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினரிடம் உடனடியாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆதித்யாவின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, நேற்று காலை குமலன்குட்டை அரசுப் பள்ளிக்கூடம் முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆதித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்று தங்கள் மகனை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும், அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கதறி அழுதனர். ஆதித்யாவை கொலை செய்த மாணவர்களை கைது செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று சிவா மிரட்டல் விடுத்தார். பின்னர், அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அழுதுகொண்டே புறப்பட்டுச் சென்றனர். காவல் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும், அவர்களை காவல்துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாகவே ஆதித்யா சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது, ஆதித்யாவிடம் அதே பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தங்களது வகுப்பில் படிக்கும் மாணவிகளுடன் பேசக்கூடாது என்று மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்கள் தான் தங்கள் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள ஒரு சந்தில் வைத்து ஆதித்யாவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆதித்யா உயிரிழந்தது காவல்துறை விசாரணையில் உறுதியானது.
இதனையடுத்து, காவல்துறையினர் அந்த மாணவர்கள் இருவரையும் உடனடியாகக் கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதித்யாவின் உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் மாணவிகளுடன் பேசிய காரணத்திற்காகவே சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களில் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment