தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன், கல்வித் தரம், அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் பணித்திறன், மற்றும் மாணவர்களின் கற்றல் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் சீரிய பணிகளை ஆற்றி வருகிறார். பொதுவாக, தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே பணிகளைக் கவனிப்பது வழக்கம். ஆனால், கண்ணப்பனைப் பொறுத்தவரை, அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், மாணவர்களின் கற்றல் ஆற்றலையும் நேரடியாகக் கண்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த வரிசையில், சமீபத்தில் வேலூரில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரை, அதிர்ச்சியையும் கவலையையும் ஒருசேர அளித்தது.
அவர் தனது உரையில், ஆசிரியர்கள் மாணவிகளை குழந்தைகளாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தமிழகம் முழுவதும் இதுவரை 350 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டார். போக்சோ சட்டம் என்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும். இச்சட்டம் 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட 350 ஆசிரியர்களில் 50 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தகவல்களைக் கூறி முடித்ததும், மாணவர்களுக்கு சரியான முறையில் பாடங்களைக் கற்றுத் தர வேண்டும் என்றும், பள்ளிகளை மாணவர்களுக்குப் பிடித்தமான இடமாக மாற்ற வேண்டும் என்றும், பள்ளிகளில் நன்னெறிகளைக் கற்றுத் தர வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
"ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது காலம் காலமாகப் போற்றப்படும் முதுமொழி. "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற தமிழ்ப் பழமொழியும் ஆசிரியரின் மகத்தான இடத்தைக் குறிக்கிறது. அறப்பணி செய்யும் ஆசிரியர்கள் தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்படுகிறார்கள். ஒரு நல்ல ஆசிரியர் ஒரு மாணவனை சிறந்த அறிவாளியாக மட்டுமல்லாமல், ஒழுக்கமுள்ள மனிதராகவும் மாற்றும் ஆற்றல் கொண்டவர். கல்வியைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நன்னெறிகளைப் போதித்து, அவர்கள் மனதில் ஒளியைப் பாய்ச்சி, அவர்களை நல்வழிப்பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவர்கள் ஆசிரியர்கள். மகாகவி பாரதியார் ஆசிரியரைப் பற்றி கூறும்போது, "ஆசிரியன் என் அழகிய நண்பன். அறிவைத் தருவான், தந்தை செய் பண்பினன்" என்று ஆசிரியர் பணியின் தூய்மையையும், சிறப்பையும் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.
இத்தகைய உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஆசிரியர்களை சமுதாயம் எதிர்பார்த்திருக்கும் வேளையில், எதுவும் அறியாத சின்னஞ்சிறு மலர்களை, ஆசிரியர் என்ற போர்வையில் உள்ள சில காமுகர்கள் கசக்கி எறியும் சம்பவங்கள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடந்த காலங்களில், பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்படுவது இல்லை. ஆனால், இன்றைய காலகட்டத்தில், பெண் குழந்தைகளும் படிக்க வேண்டும், உயர் கல்விக்குச் செல்ல வேண்டும், உயர்ந்த பதவிகளை வகிக்க வேண்டும் என்ற ஆசை அந்தப் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களைப் பெற்றவர்களுக்கும், ஏன் சமுதாயத்துக்கும் பரவலாக உள்ளது. இந்த உயரிய எண்ணங்களையும், எதிர்காலக் கனவுகளையும் இதுபோன்ற "கருப்பு ஆடுகள்" சிதைத்து விடக்கூடாது. எனவே, மாணவர்களுக்கு நன்னெறிகள் போதிப்பதைப் போல, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் அவ்வப்போது நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். மேலும், இத்தகைய தவறுகளைச் செய்யும் ஆசிரியர்களைப் பணியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்பதில் எந்தத் தயக்கமும் காட்டக்கூடாது. கல்வித் துறையும், சமூகமும் இணைந்து இத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
No comments:
Post a Comment