எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 14-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. மேலும், தனியார் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
பி.டி.எஸ். படிப்பைப் பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்களும் அமைந்துள்ளன.
இச்சூழலில், தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 25-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு 70,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க வருகிற 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கி மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment