எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் (ஜூன் 14) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு குறைந்தபட்ச கட்-ஆஃப் 127 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 113 ஆகக் குறைந்துள்ளது.
இளநிலை நீட் தேர்வு 2025 ஒரு பார்வை
2019 ஆம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை இளநிலை நீட் தேர்வை நடத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகி, மே 4 ஆம் தேதி ஒரே கட்டமாக ஓ.எம்.ஆர். தாள் மூலம் நடைபெற்றது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 22,76,069 பேர் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 2 லட்சம் குறைவு. தேர்வை எழுதியவர்கள் 22,09,318 பேர். சுமார் 66 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை. இவர்களுக்காக 12 மொழிகளில் நாடு முழுவதும் 5,468 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
தமிழகத்தின் தேர்ச்சி விவரங்கள்
தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேர் தேர்வை எழுதிய நிலையில், 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் மொழியில் 26,580 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஒப்பீடு
2023 ஆம் ஆண்டு: 11.45 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், குறைந்தபட்ச கட்-ஆஃப் 108 ஆக இருந்தது.
2024 ஆம் ஆண்டு: தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து குறைந்தபட்ச கட்-ஆஃப் 127 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஆண்டு: 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், குறைந்தபட்ச கட்-ஆஃப் 113 ஆக உள்ளது. அதேபோன்று, அதிகபட்ச கட்-ஆஃப் 686 ஆக உள்ளது.
தமிழகத்தின் சாதனை
தமிழ்நாட்டில் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. எஸ். சூர்யா நாராயணன் என்ற மாணவர், அகில இந்திய அளவில் 27வது இடத்திலும், தமிழ்நாட்டில் முதலிடத்தையும் பெற்று அசத்தியுள்ளார்.
மருத்துவ இடங்கள் மற்றும் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் மொத்தம் 11,350 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு மட்டும் 5,200 இடங்கள், தனியார் கல்லூரிகளில் சுமார் 4,000 இடங்கள் உள்ளன. மேலும், பி.டி.எஸ் படிப்பில் 2,150 இடங்கள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்கள் தமிழ்நாடு அரசின் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகின்றன.
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கு சேர விரும்புகிறவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதில் 7.5% இடங்கள் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும்.
No comments:
Post a Comment