அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
2026-ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. பொதுத்தேர்வுகளின் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் மாணவர்களுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. இதைச் செயல்படுத்தும் நோக்கில் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் வரைவு விதிகளை உருவாக்கியது. இது பொதுமக்கள் கருத்துக் கேட்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விதிமுறைகளை அமல்படுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.
இதில் முக்கியமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படும். இது அடுத்த ஆண்டு (2026) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவது கட்டாயமாகும். அதேநேரம் மே மாதம் நடைபெறும் தேர்வு விருப்பத்தேர்வு மட்டுமே. தங்கள் செயல்திறனை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் இதை எழுதலாம்.
குறிப்பாக, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடத் தேர்வு ஆகியவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களில் செயல்திறனை மேம்படுத்த மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
குளிர் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் எந்தத் தேர்வையும் எழுதலாம். பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் முறையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்படும். இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும், உள் மதிப்பீடு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். பத்தாம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ. அங்கீகரித்துள்ளதாக சன்யம் பரத்வாஜ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment