திருக்குறள்:
குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
விளக்க உரை:
ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னர், அதனால் ஏற்படும் இழப்புகள், அச்செயலால் பின்னாளில் விளையும் நன்மைகள் மற்றும் கிடைக்கும் இலாபம் ஆகியவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்த பின்னரே அச்செயலை மேற்கொள்ளுதல் வேண்டும்.
பழமொழி :
A faithful friend is life's shield.
நம்பகமான நண்பரே ஒருவரின் வாழ்வுக்குக் கேடயம் ஆவார்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடலையும் கடல் சார்ந்த பகுதிகளையும் பாதுகாப்பேன்.
2. நெகிழிக் கழிவுகளையும் பிற குப்பைகளையும் கடலில் வீசுவதைத் தவிர்ப்பேன்.
பொன்மொழி :
மனநிறைவு கொண்டவர்களுக்கே மகிழ்ச்சி உரித்தாகும் - அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
01. உலகின் மிகப்பெரிய வளைகுடா எது?
மெக்சிகோ வளைகுடா
Gulf of Mexico
02. மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் யார்?
கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்
Karl Landsteiner
ஆங்கிலச் சொற்கள் :
bustle - துடிப்புடன் செயல்படுதல்
consonance - ஒத்திசைவு
தமிழ் இலக்கணம்:
உணர்ச்சிக்குறி ( ! ): வியப்பு, ஆச்சரியம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள்: 1. அடடா! என்னே அழகு! 2. ஆ! எவ்வளவு உயரம் இம்மரம்!
அறிவியல் களஞ்சியம் :
Boat with baking powder
தேவையான பொருட்கள் :
ஒரு நெகிழி (பிளாஸ்டிக்) குப்பி, உறிஞ்சு குழல் (straw), ஆப்ப சோடா அல்லது சோடா மாவு, சிவப்பு நிற உணவுச் சாயம், எலுமிச்சை சாறு அல்லது வினிகர்.
செய்முறை :
குப்பியின் மூடியில் சிறு துளையிட்டு அதில் உறிஞ்சு குழலைச் செருகவும். குப்பிக்குள் ஆப்ப சோடாவுடன் சிவப்பு உணவுச் சாயத்தைச் சேர்க்கவும். வினிகரை ஊற்றவும். மூடியை இறுக்க மூடி, நீர் நிரம்பிய தொட்டியில் விடவும். தற்போது குப்பி ஒரு ஜெட் படகு போன்று செல்வதைக் காணலாம்.
அறிவியல் : ஆப்ப சோடா வினிகருடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்ஸைடை (CO2) உற்பத்தி செய்கிறது. இது மிகுந்த விசையுடன் உறிஞ்சு குழல் வழியாக வெளியேறுகிறது. இந்த விசையே குப்பியை அதிவேகத்தில் இயங்கச் செய்கிறது. சிவப்பு வர்ணம், தொட்டியில் உள்ள நீரிலிருந்து படகைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்ட சேர்க்கப்படுகிறது.
டிசம்பர் 16
வெற்றி நாள்
வெற்றி நாள் (இந்தி: விஜய் திவஸ், ஆங்கிலம்: Victory Day) 1971ஆம் ஆண்டில் இந்தியா வங்காளதேச முக்திவாஹினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.
1971இல் நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக, பாகிஸ்தான் இராணுவம் நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்கு பாகிஸ்தான், வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்கள் தோல்விக்குப் பின்னர், டாக்காவில் உள்ள ரமணா குதிரைப் பந்தய மைதானத்தில், ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையிலான 93,000 பாகிஸ்தான் வீரர்கள், இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத்சிங் அரோரா தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.
நீதிக்கதை
இறக்கையை இழந்தபோதும்
ஓர் அழகிய பசுமையான புல்வெளி ஒரு காட்டில் இருந்தது. அந்த நிலத்தில் பல வண்ண மலர்கள் பூத்திருந்தன. அவற்றின் ஓரமாக மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்களும் இருந்தன. அவற்றில் ஒரு பெரிய தேன்கூடு இருந்தது. அதில் வர்தினி என்னும் ராணி தேனீயும் பல வேலைக்காரத் தேனீக்களும் வசித்து வந்தன. அவற்றில் பபுல் எனும் தேனீ மிகவும் சுறுசுறுப்பானது. அதற்குத் தேன் கிடைக்கும் இடங்கள் நன்கு தெரியும். தான் அறிந்த தகவலை மற்றவர்களுடன் அது எப்பொழுதும் பகிர்ந்துகொள்ளும். எனவே, அத்தேன்கூட்டில் அனைவரும் பபுல் தேனீயை விரும்புவார்கள். அக்கூட்டில் தற்போது லாரா என்று சொல்லக்கூடிய ஒரு புதிய தேனீ பிறந்தது. அது பபுல் தேனீயைப் பார்த்து, தானும் அதைப்போலச் சுறுசுறுப்பாகவும் மற்றவர்கள் விரும்பும் வண்ணமாகவும் வாழ வேண்டும் என்று விரும்பியது. அதனால் அது அதிக தூரங்களுக்குப் பறந்து சென்று தேன் இருக்கும் மலர்களைக் கண்டுபிடித்து வந்து சொல்வதுண்டு. அப்பொழுது அங்குள்ள முதிய தேனீக்கள், "அதிக தூரம் செல்லாதே. நீ இப்போது சிறியவள். அதிக தூரம் செல்வது சில வேளைகளில் ஆபத்தாக முடியலாம்" என்று அறிவுரை கூறின. ஆனால் ஆர்வ மிகுதியால் லாரா தேனீ அனேக இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் செல்லும் பொழுது பலத்த காற்று வீசி அத்தேனீ கீழே விழுந்து விட்டது. கீழே விழுந்ததினால் அதன் இறக்கைகள் உடைந்து விட்டன. இப்பொழுது அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிற மிருகங்களால் தனக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று எண்ணி, ஒரு பெரிய இலையின் கீழ் அமர்ந்து கொண்டது. அங்கே இரண்டு நாள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் அது இருக்கும் இடம் தெரியவில்லை. அதிக மனவேதனை அடைந்தது. பெரியவர்களின் அறிவுரையைக் கேட்காமல் போனதற்காக வருந்தியது. அங்கிருந்தபடியே தன்னைச் சுற்றி நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தது. அவ்வாறு கவனிக்கும்போது அது அனேக விஷயங்களைக் கற்றுக் கொண்டது. எந்த நாட்களில் எந்த மலர்களில் தேன் இருக்கும், எந்த மலர்களில் மகரந்தத் துகள்கள் அதிகம் இருக்கும், எந்த மலர்களில் பூந்தேன் அதிகம் இருக்கும், காற்று எந்த திசையில் வீசும்போது நாம் பறக்கக் கூடாது போன்றவற்றை அதிலிருந்து அது கவனித்துக் கொண்டே இருந்தது. அதனால் அது மலர்களில் இருக்கும் தேன் மற்றும் மகரந்தத் துகள்கள் குறித்து அதிக அறிவைப் பெற்றது. இப்பொழுது அங்கிருந்தபடியே தனது கூட்டில் இருந்து வரும் சிறு தேனீக்கள், புதிய தேனீக்கள், இளம் தேனீக்கள், பபுல் தேனீக்குக் கூட அது அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. "இங்கு செல்லுங்கள், அங்கு செல்லுங்கள், இந்த மலரில் ஏறினால் அங்கு சிலந்திப் பூச்சி இருக்கும், நம்மைப் பிடித்து உண்ணும் பூச்சிகள் உண்டு, அவைகளில் சிக்கி விடாதீர்கள்" என்று அறிவுரை கூற ஆரம்பித்தது. இப்பொழுது தேன்கூட்டிலிருந்த எல்லா தேனிகளும் இதனிடமிருந்து ஆலோசனை கேட்ட பிறகு தேன் எடுக்கச் செல்ல ஆரம்பித்தன. அதனால் அந்தக் கூட்டில் தேன் அவர்களுக்கு மிகுதியாகக் கிடைத்தது.
நீதி: பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். நமக்கு ஒரு பிரச்சனை வந்தாலும் அதையே நினைத்து கலங்காமல், அதையே நமது திறமையாக மாற்ற வேண்டும்.
இன்றைய செய்திகள்
16.12.2025
⭐ நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸாகப் பதிவானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
⭐ தெற்கு ரயில்வேயின் மொத்தப் பாதை தூரமான 5,116 கிலோ மீட்டரில் 4,995 கிமீ மின்மயமாக்கப் பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
⭐ அமெரிக்கா, ரஷியா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிரம்ப் 28 அம்ச சமாதானத் திட்ட முன்மொழிவு ஒன்றை வெளியிட்டார்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀 ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. இந்த கோப்பையைக் கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இந்திய அணி பெற்றது.
🏀 உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
Today's Headlines
⭐ As the severe cold wave has intensified in the Nilgiris district, with temperatures recorded as low as zero degrees Celsius, normal life has been disrupted.
⭐ The Southern Railway has announced that 4,995 km of the Southern Railway's total track length of 5,116 km has been electrified.
⭐ The US is in talks with Russia and Ukraine. Trump unveils a 28-point peace plan proposal.
SPORTS NEWS
🏀 PM Modi congratulates the Indian team for winning the Squash World Cup. India defeated Hong Kong 3-0 to clinch the title for the first time. The Indian team became the first Asian team to win the trophy.
🏀 The World Cup Carrom Championship was held in the Maldives. Keerthana from Kasimedu, Chennai, won the championship title in the Carrom World Cup.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment